யுகொஸ்லேவியாவிலே பெல்கிரேட் நகரில் நடைப் பெற்ற முதல் அணிசேரா மகா நாட்டிலே பங்குபற்றிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் உலக பெருந்தலைவர்களாகிய நேரு, டிடோ,சுகர்னோ, நசார் மற்றும் நுக்ருமா போன்றோருடன் இணைந்து இந்த இயக்கத்தின் ஆரம்பக்கட்ட உறுப்பினரானார். இந்த மகா நாட்டிலே பேசிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் “எனது நாட்டின் பிரதிநிதியாக மட்டுமின்றி கோடிக்கணக்கான பெண்களின் உணர்வுகளும் சிந்தனைகளையும் புரிந்துக்கொள்ளக் கூடிய ஒரு பெண்ணாகவும் தாயாகவும் இந்த மாபெரும் மகா நட்டிலே பங்கு பற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார். உலக நாடுகள் சீக்கிரமாக பல அணிகளுக்கு பிரிந்து செயற்படும் ஓர் காலகட்டத்தில், இந்த இயக்கத்தின் பெறுமதியையும் ஆற்றலையும் உணர்ந்து செயற்பட்ட திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் “எந்த அளவுக்கு சக்திமிக்க நாடாக இருந்தாலும் கூட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க கூடிய விடயங்களுக்கு யுத்தம் எந்த விதத்திலும் மாற்று வழியாக கருத முடியாதென்ற கருத்தை உலகளாவிய ரீதியில் உருவாக்குவதே எங்களின் பெருமுயற்சியாக இருக்க வேண்டும்” என்று ஆணித்தரமாக கூறி வந்தார். இவ்வாறாக இவருடைய அணி சேரா இயக்கத்தினுடைய நீண்ட பிணைப்பு ஆரம்பிக்கப்பட்டு, ஒவ்வொரு உச்சி மாநாடுக்கும் சமூகமளித்த இவரை 1976 ஆம் அண்டில் கொழும்பிலே நடைப்பெற்ற ஜந்தாவது உச்சி மாநாட்டில் தலைவராக தேர்ந்தெடுத்து இலங்கைக்கு தலமைப்பீடம் வழங்கப்பட்டது.